Hanuman Movie Review:
Hanuman Movie Review: பிரைம் ஷோ என்டர்டெயின்மென்ட் சார்பில் நிரஞ்சன் ரெட்டி தயாரித்துள்ள படம் ஹனுமன். பிரசாந்த் வர்மா இயக்கத்தில் தேஜா சஜ்ஜா, அமிர்தா, வரலட்சுமி சரத்குமார் நடித்துள்ள ஹனுமன் படம் தற்போது திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. ஹனுமனை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த சூப்பர் ஹீரோ திரைப்படமான “ஹனுமேன்” படத்தில் தேஜா சஜ்ஜா, அமிர்தா, வரலட்சுமி சரத்குமார், கிஷோர், வினைய் , தீபக் ஷெட்டி, சத்யா ஆகியோர் நடித்துள்ளனர்.
படத்தில் வில்லனாக வரும் வினைய் சிறுவயதில் இருந்தே சூப்பர் ஹீரோ கதாபாத்திரங்களை பார்த்து,அதே போல மாற முயற்சி செய்கிறார். இதை கண்டித்த தனது தாய் மற்றும் தந்தையை சிறு வயதிலேயே கொலை செய்து விடுகிறார். பின்பு அறிவியலின் உதவியுடன், இயந்திர சூட் மூலம் தன்னை சூப்பர் ஹீரோவாக மாற்றிக் கொள்கிறார். அதிலும் திருப்தி காணாமல் இயற்கையாகவே தான் ஒரு சூப்பர் ஹீரோவாக மாற வேண்டும் என்று ஒவ்வொரு ஆராய்ச்சிகளாக முயற்சி செய்கிறார் வினைய்.
மறுபுறம் ஹீரோ வான தேஜா சஜ்ஜாவிற்கு திடீரென சூப்பர் பவர் கிடைக்கிறது. இந்த விஷயம் வில்லன் வினைய்க்கு தெரிய வர , அவர் ஹீரோ வான தேஜா சஜ்ஜா கிராமத்திற்கு சென்று அந்த சக்தியை அடைய நினைக்கிறார். இறுதியில் என்ன ஆனது? அந்த சக்தி அவருக்கு கிடைத்ததா…..? இல்லையா? என்பதே ஹனுமேன் படத்தின் கதை.
படம் முழுக்க உள்ள விஎப்எக்ஸ் காட்சிகள் படத்தை தாங்கி நிற்கிறது. சிறிய பட்ஜெட்டில் இவ்வளவு அருமையான vfx காட்சிகள் அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது. மேலும் இந்திய சினிமாவிற்கு ஒரு புதிய ஹீரோவையும் அறிமுகப்படுத்தியுள்ளது. ஹீரோவான தேஜா சஜ்ஜா -அனுமந்து என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தனது கிராமத்தில் சிறிய திருட்டுகளை செய்து,தனது அக்கா வரலட்சுமி உடன் வாழ்ந்து வரும் நிலையில்,தேஜா சஜ்ஜாவிற்கு , ஹனுமனின் சக்தி கிடைக்க, அதை வைத்து அவர் என்னவெல்லாம் செய்கிறார் என்பதை மிக சுவாரசியமாக கொடுத்துள்ளார் இயக்குனர் பிரசாந்த் வர்மா.
கதாநாயகியாக நடித்துள்ள அமிர்தாவுக்கு கதையில் முக்கிய கதாபாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளது, அதை அவர் ஓரளவுக்கு ஏற்று நடித்துள்ளார். உண்மையிலேயே மிகச் சிறப்பாக நடித்துள்ளது வினைய் மட்டுமே.
தனது வழக்கமான வில்லன் கதாபாத்திரத்தில் மிகச் சிறப்பாக நடித்துள்ளார். அதேபோல வரலட்சுமி சரத்குமாருக்கு ஒரு சிறிய கதாபாத்திரம் என்றாலும் கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. மேலும் கிஷோர் மற்றும் ஸ்ரீனு அந்தந்த கதாபாத்திரங்களில் நன்றாக நடித்துள்ளனர். இயக்குனர் சொல்ல நினைத்ததை ஒளிப்பதிவாளர் தசராதி சிவேந்திரா தனது கேமரா மூலம் சொல்லி உள்ளார் . கிருஷ்ணாவின் இசையில் பாடல்கள் ஒன்றும் சொல்வதற்கு இல்லை .பின்னணி இசை சுமார். மொத்தத்தில் படம் குறைந்த பட்ஜெட்டில் ஒரு தரமான தயாரிப்பு.
விமர்சனம்- ராஜூ.