பிரசாந்த் நடிக்கும் ‘அந்தகன்’ படத்தில் இருந்து ‘அந்தகன் ஆந்தம்’ ப்ரமோ பாடல் வெளியீடு
‘அந்தகன்’ ரீமேக் அல்ல ரீமேட் (Remade) படம்: தியாகராஜன்
‘டாப் ஸ்டார்’ பிரசாந்த் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘அந்தகன் – தி பியானிஸ்ட்’ திரைப்படத்தினை ரசிகர்களிடத்தில் பிரபலப்படுத்தும் வகையில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையில், இசையமைப்பாளரும், பின்னணி பாடகருமான அனிருத் மற்றும் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி ஆகியோர் பின்னணி பாட, ‘அந்தகன் ஆந்தம்’ எனும் ப்ரமோ பாடல் தயாராகி இருக்கிறது. இந்த பாடலின் உள்ளடக்கத்தை உருவாக்கி, காட்சிப்படுத்தியிருக்கிறார் ‘நடன புயல்’ பிரபுதேவா. இந்த பாடலை தளபதி விஜய் வெளியிட்டு, பட குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.
இதைத் தொடர்ந்து இந்தப் பாடலை அறிமுகப்படுத்தும் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. இதன்போது இயக்குநர் தியாகராஜன், நடிகர் பிரசாந்த், இயக்குநர் – நடிகர் கே .எஸ். ரவிக்குமார், நடிகை ஊர்வசி, நடிகை பிரியா ஆனந்த், நடிகை வனிதா விஜயகுமார், நடிகர்கள் பூவையார், பெசன்ட் ரவி, ஆதேஷ் பாலா, மோகன் வைத்யா, ஒளிப்பதிவாளர் ரவி யாதவ், சோனி மியூசிக் நிறுவனத்தின் தென் மண்டல தலைவர் அசோக் பர்வானி மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் படத்தின் இயக்குநரான தியாகராஜன் பேசுகையில், ”2019ம் ஆண்டில் பலத்த போட்டிகளுக்கு இடையே இந்தியில் வெளியான ‘அந்தாதூன்’ படத்தின் தமிழ் உரிமையை வாங்கினேன். தமிழ் திரையுலகில் பெரிய பெரிய நட்சத்திர நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் என பலரும் இப்படத்தின் தமிழ் உரிமையை வாங்குவதற்கு போட்டியிட்டார்கள்.
இந்தப் படத்தை ஏன் வாங்க வேண்டும் என தோன்றியது என்றால், அதில் ஒரு பார்வை திறன் சவால் உள்ள மாற்றுத்திறனாளி தான் கதையின் நாயகன். அவன் ஒரு பியானோ வாசிக்கும் இசை கலைஞன். பிரசாந்த் சிறிய வயதிலிருந்து பியானோ வாசிப்பான், லண்டன் டிரினிட்டி இசைக்கல்லூரியில் பியானோ இசையில் நான்காவது கிரேடில் தேர்ச்சி பெற்றிருக்கிறான். அவனுக்கு இந்த கதை மிகவும் பொருத்தமாக இருக்கும் என்று நினைத்து தான் இதன் தமிழ் உரிமையை வாங்கினேன்.
படத்தை வாங்கிய பிறகு கொரோனாவால் இரண்டு ஆண்டு காலம் சென்றது. அதன் பிறகு இடர்பாடுகள் ஏற்பட்டதன. அதனைத் தொடர்ந்து நான் படத்தை இயக்கும் பொறுப்பினை ஏற்றுக் கொண்டேன். ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் பொருத்தமான நட்சத்திர நடிகர்களை தேர்வு செய்தோம். குறிப்பாக இதில் ஒரு டாக்டர் கேரக்டர் இருக்கிறது. அந்த கேரக்டருக்கு இயக்குநரும், நடிகருமான கே. எஸ். ரவிக்குமார் தான் பொருத்தமாக இருப்பார் என்று அவரை தொடர்பு கொண்டு பேசினேன். அவரும் கதையைக் கேட்டவுடன் நடிக்க ஒப்புக்கொண்டார். படத்தில் அவருடைய பங்களிப்பு அதிகம். திறமையான நடிப்பால் அந்த கதாபாத்திரத்தை அவர் மெருகேற்றி இருக்கிறார்.
நடிகை பிரியா ஆனந்த் அழகான பெண். இந்த படத்தில் அவரை இளமையாகவும், அழகாகவும் காட்சிப்படுத்தி இருக்கிறோம். லண்டனின் வீதிகளில் அவர் நடந்து செல்லும் ஸ்டைலும், அவரின் அவுட்லுக்கும் அனைவரும் ரசிக்கக் கூடியதாக இருக்கும்.
நடிகை சிம்ரனும் இந்தப் படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். சற்று எதிர்மறையான கதாபாத்திரம் என்றாலும் திறமையான நடிப்பால் அந்த கதாபாத்திரத்தை உயிர்ப்பித்திருக்கிறார். அவருடைய சிறந்த நடிப்பிற்காக இந்த வருடம் அவருக்கு நிச்சயம் விருது கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
அடுத்ததாக வனிதா விஜயகுமார்- அவருடைய நடிப்புக்கு தீனி போடும் வகையில் பொருத்தமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
கார்த்திக் பழம்பெரும் நடிகர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ‘அலைகள் ஓய்வதில்லை’ படத்தில் தொடங்கிய அவருடனான நட்பு இன்றும் தொடர்கிறது. படப்பிடிப்பு தளத்திற்கு காலை எட்டு மணிக்கு வருகை தந்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறார். அவருடைய தொடக்க காலகட்டத்தில் நடித்த துள்ளலான நடிப்பை இப்படத்தில் காணலாம்.
அதேபோல் படத்தில் இடம்பெறும் சிறிய கதாபாத்திரத்திற்கு கூட பொருத்தமான நட்சத்திர நடிகர்களை தேர்வு செய்து நடிக்க வைத்திருக்கிறோம். சமுத்திரக்கனி, பூவையார், மோகன் வைத்யா, ஆதேஷ் பாலா என பலரும் நடித்திருக்கிறார்கள்.
இவர்களைத் தொடர்ந்து நடிகர் யோகி பாபு முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். மிகவும் பரபரப்பாக நடித்துக் கொண்டிருக்கும் யோகி பாபு இந்த படத்திற்காக வழங்கிய ஒத்துழைப்பும் மறக்க முடியாதது.
யோகி பாபுவுக்கு சகோதரியாக ஊர்வசி நடித்திருக்கிறார். ஊர்வசி என்னுடன் சில திரைப்படங்களில் ஜோடியாக நடித்திருக்கிறார். பிரசாந்த் நடித்த ‘மன்னவா’ படத்திலும் நடித்திருக்கிறார். இப்படத்தின் ஒரிஜினலில் ஊர்வசி கதாபாத்திரம் இருக்கிறது. ஆனால் தமிழில் அந்த கதாபாத்திரம் மேலும் விரிவாக்கம் செய்யப்பட்டிருக்கிறது. அது ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை வழங்கும் ஊர்வசி- யோகி பாபு- கே எஸ் ரவிக்குமார்- பிரசாந்த் ஆகியோர் இணைந்து நடித்திருக்கிறார்கள். அந்த காட்சிகள் எல்லாம் ரசிகர்களை உற்சாகமாக்கும்.
பிரசாந்த் நடித்த ‘செம்பருத்தி’, ‘காதல் கவிதை’ ஆகிய படங்களில் பணியாற்றிய ரவி யாதவ் இந்த திரைப்படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றி இருக்கிறார். லண்டனில் இருந்த ரவி யாதவ் நான் அழைத்தவுடன் மகிழ்ச்சியுடன் சம்மதித்து இந்த படத்தில் பணியாற்றியிருக்கிறார்.
கலை இயக்குநர் செந்தில் ராகவன், ஒலி வடிவமைப்பாளர் லட்சுமி நாராயணன் என அவரவர் துறையில் மிகுந்த தேர்ச்சி பெற்ற கலைஞர்களை ஒருங்கிணைத்து இப்படத்தை உருவாக்கி இருக்கிறோம்.
இந்தி பதிப்பில் இல்லாத பல விஷயங்களை தமிழ் ரசிகர்களை மனதில் வைத்து இணைத்திருக்கிறோம். அதனால் அந்தகன் ரீமேக் படம் அல்ல ரீமேட் படம். அதாவது மறு உருவாக்கம் செய்யப்பட்ட படைப்பு. அந்தகன் திரைப்படம் ரசிகர்களுக்காக புதுமையாகவும், நேர்த்தியாகவும் அமைக்கப்பட்டிருக்கிறது. இப்படத்தின் உச்சகட்ட காட்சி பெரும் விவாதத்தை ஏற்படுத்தும். இது ரசிகர்களை மீண்டும் திரையரங்கத்திற்கு வரவழைக்கும் வகையில் அமைந்திருக்கிறது. இந்தத் திரைப்படம் வெளியான பிறகு இந்தியில் வெளியான அந்தாதூன் திரைப்படத்திற்கும், தமிழில் வெளியாகி இருக்கும் அந்தகன் படத்திற்கும் இடையேயான வித்தியாசத்தை உணர்வீர்கள். இந்தியில் இல்லாத பல விஷயங்களை நாங்கள் முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கியிருக்கிறோம். அதிலும் அந்தகன் திரைப்படம் பிரசாந்தின் ஐம்பதாவது திரைப்படம் என்பதால் கூடுதல் முக்கியத்துவம் வழங்கியிருக்கிறோம். இந்தத் திரைப்படத்தை ஆகஸ்ட் மாதத்தில் வெளியிட திட்டமிட்டிருக்கிறோம்,,” என்றார்.
இயக்குநர் – நடிகர் கே.எஸ். ரவிக்குமார் பேசுகையில், ”மிகவும் சந்தோஷமான நிகழ்வு இது. தியாகராஜன் சாரை என்னுடைய கல்லூரி பருவ நாட்களில் இருந்தே பார்த்துக் கொண்டிருக்கிறேன். நான் ஒரு ஏற்றுமதியாளராக இருந்தேன். அவரும் ஒரு ஏற்றுமதியாளராக இருந்தார். அந்த வகையில் அவர் மீது ஒரு ஈடுபாடு எனக்கு இருந்தது. அவர் நடித்த, தயாரித்த திரைப்படங்களை பார்த்திருக்கிறேன். நான் இயக்கி, நடித்த திரைப்படங்களை அவரும் பார்த்திருக்கிறார். இப்படி தொழில் முறையிலான நட்புதான் எங்களுக்குள் இருந்தது.
இந்தத் தருணத்தில் ‘அந்தகன்’ படத்தில் நடிக்க தியாகராஜன் அழைப்பு விடுத்தார். அவர் மீது இருந்த அன்பின் காரணமாக நடிக்க ஒப்புக்கொண்டேன். அதன் பிறகு இந்தி படத்தினை பார்த்தேன். பிரமாதமான படைப்பு. அதனை சாதாரணமாக ரீமேக் செய்தாலே வெற்றி கிடைக்கும். ஆனால் தியாகராஜன் சார் அப்படத்திற்கு நட்சத்திர நடிகர்கள், பிரம்மாண்டமான தயாரிப்பு என பல விஷயங்களை கவனித்து, கடினமாக உழைத்து உருவாக்கியிருக்கிறார்.
படத்திற்காக சிறிய சமரசம் செய்து கொள்ளாமல் நேர்த்தியாக உருவாக்கினார். படப்பிடிப்பு தளத்தில் அவர் பயன்படுத்திய மானிட்டர் கூட பிரம்மாண்டமாக இருக்கும். அப்போதே அவருடைய ஈடுபாடு நன்கு தெரிந்தது . இப்படத்தில் நடித்த நடிகர் நடிகைகள் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.
பிரசாந்த்திற்கு அந்தகன் ஐம்பதாவது படம் என்பது இங்கு வந்த பிறகுதான் எனக்கு தெரியும். பிரசாந்த் நூறு படங்களை தொட வேண்டும் என வாழ்த்துகிறேன். கண்டிப்பாக அவர் அதனை தொடுவார். பார்ப்பதற்கு ஆஜானுபாகுவான தோற்றம் இருந்தாலும் அவருக்கு குழந்தை மனசு.
இந்தத் திரைப்படத்தில் நடிப்பதற்கு முன்பே ஏராளமான திரைப்பட விழாக்களில் அவரை சந்தித்து இருக்கிறேன். நான் ‘புரியாத புதிர்’ படத்தினை இயக்கிக் கொண்டிருக்கும்போது, அந்தப் பட தயாரிப்பு நிறுவனத்தின் அருகில் உள்ள வளாகத்தில் தான் தயாரிப்பாளர் அன்பாலயா பிரபாகரனின் அலுவலகம் இருந்தது. நான் நான்கு படங்களை இயக்கி விட்டு, அன்பாலயா பிரபாகரனுக்காக ‘பொண்டாட்டி ராஜ்ஜியம்’ எனும் படத்தை இயக்க ஒப்புக்கொண்ட போது பிரசாந்த் பிசியான முன்னணி நடிகராகிவிட்டார்.
அந்த கால கட்டத்தில வெளிநாடுகளில் கலை நிகழ்ச்சி நடைபெறுகிறது என்றால்.. முதலில் பிரசாந்தை ஒப்பந்தம் செய்யுங்கள் என்று தான் விழா குழுவினர் கோரிக்கை வைப்பார்கள். அந்த அளவிற்கு பிரசாந்த்திற்கு உலக நாடுகளில் ரசிகர்களும், ரசிகைகளும் இருக்கிறார்கள்.
இந்த படத்தில் நடிகை ஊர்வசி நடித்திருக்கிறார். அவருக்கு ஊர்வசி என்று பெயர் வைப்பதற்கு பதிலாக ராட்சசி என்று பெயர் வைத்திருக்கலாம், அந்த அளவிற்கு திறமையான நடிகை.
இந்த படம் பிரம்மாண்டமாக இருக்கும். நன்றாகவும் இருக்கும். இந்த படத்தை பார்க்கும் ரசிகர்கள்.. படம் பார்த்துவிட்டு வீட்டிற்கு சென்ற பிறகும் அவர்களில் மனதில் நிற்கும் படமாக இது இருக்கும், இருக்க வேண்டும் என வாழ்த்துகிறேன்.
‘அத்தகன் ஆந்தம்’ பாடலை ஒரு முறை கேட்கும்போதே மனதில் பதிந்து விடுகிறது. இந்த ப்ரமோ பாடல் மட்டுமல்லாமல், படமும் பெரிய வெற்றி பெற வாழ்த்துகிறேன்,” என்றார்.
நடிகை வனிதா விஜயகுமார் பேசுகையில், ”இன்றைய நாள் எனக்கு மிகவும் உணர்வுபூர்வமான நாள். என்னுடைய திரையுலக பயணத்தில் மிக முக்கியமான படம் இது. இந்தத் திரைப்படத்தில் அற்புதமான ஒரு வேடம் கிடைத்திருக்கிறது அதில் திறமையாக நடித்திருக்கிறேன். இதனால் எனக்கு பல வாய்ப்புகள் கிடைக்கும் என்பதால் இதனை குறிப்பிடவில்லை. இது என் குடும்பம். என்னுடைய வாழ்க்கையில் மிகச்சிறந்த வழிகாட்டி தியாகராஜன் சார். இன்றும் அவரை நான் நேசிக்கிறேன்.
பிரசாந்த் எனக்கு புதியவரல்ல. நான் 90களில் பள்ளிகளில் படித்துக் கொண்டிருக்கும் போதே அவர் மீது எனக்கு கிரஷ் இருந்தது. என்னுடைய முதல் டீன் ஏஜ் கிரஷ் பிரசாந்த் தான்.
அவருடன் கடந்த சில வருடங்களாக பழகும் போது அன்பான நட்பு கிடைத்தது. அந்த நட்பு அழகானது. மதிப்பு வாய்ந்தது. பிரசாந்த் சிறந்த மனிதர். அவரை நினைத்து நான் மிகவும் பெருமிதம் அடைகிறேன். அவருடைய நேர்மை , பெருந்தன்மை, அர்ப்பணிப்பு, கடும் உழைப்பு என எல்லாமே அவருடைய தந்தையிடம் இருந்து அவர் கற்றுக் கொண்டிருக்கிறார். அவர் எப்போதும், ‘இவர் (தியாகராஜன்) போன்ற ஒரு அப்பா இருந்தால் அதுவே போதும் ‘ என்பார்.
இந்த திரைப்படம் தரமான படைப்பு. அருமையான நட்சத்திர கலைஞர்கள், திறமை வாய்ந்த தொழில்நுட்ப கலைஞர்கள் ஆகியோரின் கூட்டணியில் உருவாகி இருக்கிறது. இந்தப் படைப்பை விளம்பரப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் கூட எனக்கு இல்லை. ஏனென்றால் இந்த திரைப்படம் அதுவாகவே விளம்பரத்தை தேடிக் கொள்ளும். ரசிகர்களிடம் இந்தத் திரைப்படம் எளிதாக தானாகவே சென்றடையும். இந்தத் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெறும்.
ஒரு ரசிகையாக இந்தியில் வெளியான அந்தாதுன் திரைப்படத்தையும் பார்த்திருக்கிறேன். அந்த படத்தின் வேற்று மொழி ரீமேக்கையும் பார்த்திருக்கிறேன். ஆனால் தியாகராஜன் சார் தமிழில் மிகப் பெரும் நட்சத்திர பலத்துடன் இந்த திரைப்படத்தை உருவாக்கி இருக்கிறார்.
இந்த திரைப்படத்தில் பணியாற்றும் போது படப்பிடிப்பு தளத்தில் பணிகளை நிறைவு செய்தவுடன் தியாகராஜன் சார் அன்றைய சம்பளத்தை அன்றே கொடுத்து விடுவார். படத்திற்கு பின்னணி பேசும் போது இரண்டு மடங்கு சம்பளத்தை கொடுத்தார். அவரிடம் பணம் இருக்கிறது என்பதற்காக கொடுக்கவில்லை. ஒரு நட்சத்திரத்தின் மதிப்பை அறிந்து அதனை கவுரவப்படுத்தும் விதமாக அது இருந்தது.
நான் ஒரு பயணத்தின் போது என்னுடைய செல்போனை தொலைத்து விட்டேன். அப்போது தியாகராஜன் சார் தொடர்பு கொண்டார். நான் பதட்டத்தில் இருப்பதை உணர்ந்து, உடனடியாக நீ எங்கு இருக்கிறாய் என கேட்டார். உடனடியாக எனக்கு ஒரு விலை உயர்ந்த செல்போனை பரிசாக அளித்தார், அதுதான் தியாகராஜன் சார்,” என்றார்.
நடிகை பிரியா ஆனந்த் பேசுகையில், ”இங்கு வந்த பிறகுதான் தமிழில் பணியாற்றி நீண்ட நாள் ஆகிவிட்டது என்ற உணர்வு எழுகிறது. இந்த ஒட்டுமொத்த படக்குழுவில் இயக்குநர் தியாகராஜன் என்னுடைய நண்பர் என்று தான் சொல்வேன். இந்த படத்தில் நடித்த நடிகர்கள் அனைவரும் தியாகராஜன் மீது வைத்திருக்கும் அன்பின் காரணமாகத்தான் நடிக்க ஒப்புக் கொண்டார்கள். அனைவரும் பிரசாந்த் மீதும் அளவற்ற அன்பு வைத்திருந்தார்கள். ஏராளமான சக கலைஞர்களுடன் பணியாற்றி இருக்கிறேன். ஆனால் அனைவரை காட்டிலும் பிரசாந்த் தனித்துவமிக்கவர். அவருக்கு சினிமா மீதான பற்றும், தேடலும் அதிகம். இந்த திரைப்படத்திற்கு வி எஃப் எக்ஸ் காட்சிகளை மேற்பார்வையிட்டது பிரசாந்த் தான். சினிமாவில் அறிமுகமாகும் அனைத்து நவீன தொழில்நுட்பங்களை பற்றியும் அவர் அறிந்து வைத்திருக்கிறார். இந்தப் படத்தில் பணியாற்றி இங்கு வந்து நிற்கும் போது தான் தாய் வீட்டிற்கு வந்த மகிழ்ச்சி கிடைத்திருக்கிறது,” என்றார்.
நடிகர் பிரசாந்த் பேசுகையில், ”இந்த அந்தகன் ஆந்தம் பாடலை வெளியிட்ட தளபதி விஜய்க்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். கேட்டதும் மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டு, இதற்காக நேரம் ஒதுக்கி, இந்த பாடலை வெளியிட்டதற்காக அவருக்கு மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் பாட்டை உருவாக்கிய பிரபு தேவாவிற்கும், நடனம் அமைத்த சாண்டி மாஸ்டருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் பாடலில் பங்களிப்பு செய்த அனிருத் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
ஒரு படத்திற்கான ப்ரோமோ பாடலை இந்த அளவு பிரம்மாண்டமாக உருவாக்க முடியுமா என்ற கேள்வி எழுகிறது. இதிலும் நட்சத்திர கலைஞர்களை இடம்பெறவைத்து, அனைவரும் ரசிக்கும் வகையிலும், அனைவருக்கும் பிடிக்கும் வகையிலும் கடினமாக உழைத்து உருவாக்கியிருக்கிறோம்.
இந்தப் படத்தில் இடம்பெறும் ஒவ்வொரு சிறிய கதாபாத்திரங்களுக்கும் நட்சத்திர கலைஞர்கள் தேர்வு செய்யப்பட்டு நடித்திருக்கிறார்கள். இயக்குநர் தியாகராஜன் இந்த விஷயத்தில் நுட்பமாக கவனித்து திறம்பட செயல்பட்டு இருக்கிறார். கார்த்திக் சார், கே எஸ். ரவிக்குமார் சார், ஊர்வசி மேடம், சமுத்திரகனி சார், மனோபாலா சார், யோகி பாபு சார், பூவையார், ஆதேஷ் பாலா, வனிதா விஜயகுமார், செம்மலர் அன்னம் என ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் பொருத்தமான கலைஞர்கள் நடித்திருக்கிறார்கள். அனைவரும் அப்பா அழைத்தவுடன் அவர் மீது வைத்திருந்த அன்பின் காரணமாக படபிடிப்பு தளத்திற்கு வருகை தந்து முழுமையான ஒத்துழைப்பை வழங்கினார்கள். அப்பா மீது இன்றளவும் குறையாத மதிப்பு மரியாதை வைத்திருக்கும் அனைத்து கலைஞர்களுக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
நடிகர்கள் மட்டுமல்லாமல் தொழில்நுட்ப கலைஞர்களும் திறமையானவர்களே இணைந்து பணியாற்றினார்கள். ஒளிப்பதிவாளர் ரவி யாதவ் கடுமையாக உழைத்து ஒவ்வொரு காட்சியையும் பிரம்மாண்டமாகவும், நேர்த்தியாகவும் உருவாக்கி இருக்கிறார்.இந்தப் படம் பிரம்மாண்டமாக இருக்கிறது என அனைவரும் சொல்கிறார்கள் என்றால் அதற்கு காரணம் ஒளிப்பதிவாளர் ரவி யாதவ் தான். இதற்காக அவருக்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
சந்தோஷ் நாராயணனின் இசை, சதீஷ் சூர்யாவின் படத்தொகுப்பு, செந்தில் ராகவனின் கலை இயக்கம் என ஒவ்வொரு தொழில்நுட்ப கலைஞரும் தங்களின் முழுமையான திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.
இந்தப் படத்தில் இடம்பெறும் ‘என் காதலே…’ எனும் பாடலை டான்ஸ் மாஸ்டர் கலா ஆறு மணி நேரத்திலேயே நடனம் அமைத்து ஆச்சரியப்படுத்தினார்.
இந்தப் படத்தில் அப்பா எந்த வகையான காட்சிகளை திரையில் காட்சிப்படுத்த வேண்டும் என்று நினைத்தாரோ அதற்காக அனைவரும் உழைத்தனர். இந்தப் படம் மிகவும் நன்றாக இருக்கிறது. ரசிகர்கள் திரையரங்கத்தில் இந்த படத்தை பார்க்கும் போது ஆனந்தம் அடைவார்கள். மகிழ்ச்சி அடைவார்கள். அந்த தருணத்திற்காக நான் காத்துக் கொண்டிருக்கிறேன். இந்த தருணத்தில் இன்றளவும் என் மீது அன்பும், பாசமும் காட்டும் ரசிகர்களுக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்,” என்றார்.
நடிகை ஊர்வசி பேசுகையில், ”தியாகராஜன் சார் மிலிட்டரி மேன் மாதிரி அனைத்தும் நேரத்திற்கு ஏற்றபடி சரியாக நடக்க வேண்டும் என நினைப்பார். 1984ம் ஆண்டில் தியாகராஜன் சார் தயாரித்த திரைப்படம் ‘கொம்பேறி மூக்கன்’ அதில் நான் அவருக்கு ஜோடியாக நடித்திருக்கிறேன். அந்தப் படத்தில் சரிதாவும் நடித்திருந்தார்.
அன்றிலிருந்து ஆரம்பித்த அந்த மரியாதைக்குரிய அன்பும், நட்பும் இன்றும் தொடர்கிறது. பிரசாந்துடன் நான் ‘தமிழ்’ படத்தில் நடித்திருக்கிறேன். அவரும் எனக்கு நல்ல நண்பர். ‘மன்னவா’ படத்திலும் நடித்திருக்கிறேன்.
இந்த இருவருக்கும் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் தொடர்பு கொண்டு உதவி கேட்டால் அடுத்த நிமிடம் எனக்காக வந்து நிற்பார்கள்.
அந்தகன் நல்ல படம். நம்முடைய மண்ணிற்கு என்ன தேவையோ அந்த மாற்றங்களை செய்துதான் இந்த படத்தை தியாகராஜன் உருவாக்கியிருக்கிறார். இந்தப் படத்தில் அமைந்திருக்கும் நட்சத்திர கூட்டணி போல் வேறு எந்த படத்திலும் அமைந்திருக்காது., அமைந்ததும் இல்லை. இந்த படம் நன்றாக ஓட வேண்டும், ஓடும் என நம்புகிறேன் அனைவரும் வாழ்த்துங்கள்,” என்றார்.