15 ஆம் ஆண்டு சர்வதேச நார்வே தமிழ்த் திரைப்பட விழாவில் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட படங்கள் அறிவிப்பு
———————————————–
சர்வதேச நார்வே தமிழ்த் திரைப்பட விழாவில் விஜயகாந்த் பெயரில் விருது – வசீகரன் சிவலிங்கம் அறிவிப்பு
———————————————–
15 வது சர்வதேச நார்வே தமிழ்த் திரைப்பட விழா மற்றும் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட படங்கள் அறிவிப்பு நிகழ்ச்சி மற்றும் ‘வீரத்தின் மகன்’ திரைப்பட திரையிடல் பிப்ரவரி 18 ஆம் தேதி சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் தயாரிப்பாளரும், இயக்குநருமான வி.சி.குகுநாதன், நடிகர் போஸ் வெங்கட், இயக்குநர் கெளரவ், தயாரிப்பாளர்கள் சங்க செயற்குழு உறுப்பினர் விஜயமுரளி, இயக்குநர் கலைப்புலி ஜி.சேகரன், பி.ஆர்.ஓ சங்க முன்னாள் செயலாளர் பெரு துளசி பழனிவேல் உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டார்கள்.
நார்வே தமிழ்த் திரைப்பட விழாவின் இயக்குநர் வசீகரன் சிவலிங்கம் பேசுகையில்,
———————————————–
“ஆஸ்கார் உள்ளிட்ட வெளிநாட்டு விருதுகள் மற்றும் திரைப்பட விழாக்களின் பின்னால் நம் மக்கள் ஓடிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், உலகம் முழுவதும் வாழும் தமிழர்களுக்கு என்று தனியான திரைப்பட விழாக்கள் இல்லை. சுமார் 222 நாடுகளில் வசிக்கும் தமிழர்களுக்கும், அவர்களது படைப்புகளுக்கும் தனி அங்கீகாரம் கிடைக்க வேண்டும், அதற்காக தமிழர்களுக்கான திரைப்பட விழா ஒன்றை உருவாக்க வேண்டும் என்று நான் கடந்த 2000 ஆம் ஆண்டு முதல் நினைத்து வந்தேன். பிறகு 20210 ஆம் ஆண்டு அதற்கான முதல் அஸ்த்திவாரத்தை அமைத்து, சிறுக சிறுக என்று இன்று மிகப்பெரிய விழாவாக நார்வே தமிழ்த் திரைப்பட விழாவை நடத்திக் கொண்டிருக்கிறோம்.
நாம் ஆரம்பிக்கும் போது எனக்கு எந்தவித ஆதரவும் கிடைக்கவில்லை. நார்வே நாட்டில் 15 ஆயிரம் மக்கள் தான் இருப்பார்கள், ஏதோ ஒரு திரைப்பட விழா என்று தான் நினைப்பார்கள். ஆனால், இன்று சுமார் இரண்டரை கோடிக்கு மேல் நான் விதைத்திருக்கிறேன். நம் படைப்புகளை உலகளவில் கொண்டு செல்ல வேண்டும் என்பதற்கான முயற்சி தான் இந்த திரைப்பட விழா. ஆனால், விருது அறிவிக்கப்பட்ட 25 கலைஞர்களையும் நார்வே நாட்டுக்கு அழைத்துச் சென்று விருது வழங்க வேண்டும் என்பது தான் என் ஆசை. ஆனால், அவர்களை அங்கே அழைத்து செல்வது என்பது மிகப்பெரிய பொருட்ச்செலவு. அதனால், இந்த நிகழ்ச்சியின் மூலம் தமிழக அரசுக்கு ஒரு கோரிக்கை வைக்கிறேன், விருது அறிவிக்கப்பட்ட அனைத்து கலைஞர்களையும் நார்வே நாட்டுக்கு அழைத்துச் சென்று கெளரவிக்க வேண்டும், அதற்கு உதவி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இந்த ஆண்டு முதல், ஈழ தமிழர்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வந்ததோடு, தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தை தவிர்த்த எங்கள் புரட்சிக்கலைஞர் விஜயகாந்த் பெயரில் விருது வழங்குவதை பெருமையாக அறிவிக்கிறோம். நாங்கள் தொடர்ந்து இந்த விழாவை நடத்திக் கொண்டிருப்போம். எனக்கு பிறகு என் இடத்தில் இருந்து நார்வே தமிழ்த் திரைப்பட விழாவை நடத்துவார்கள். நிச்சயம் ஒரு நாள் ஆஸ்கார் விருதுக்கு சமமான விருதாக சர்வதேச நார்வே தமிழ்த் திரைப்பட விருது இருக்கும், என்று கூறி விடைபெறுகிறேன்.” என்றார்.
இயக்குநர் கெளரவ் பேசுகையில்,
———————————————–
“வசீகரன் கடுமையான உழைப்பாளி, எனது சிறந்த நண்பர். நார்வே திரைப்பட விருது இரண்டு வாங்கியிருக்கிறேன். ஒவ்வொரு ஆண்டும் விருது விழா அடுத்தடுத்த கட்டத்தை நோக்கி பயணிக்கிறது. நார்வே தமிழ்த் திரைப்பட விழாவுக்கு வருபவர்கள் அனைவரும் வசீகரன் என்ற தனி மனிதருக்காக தான் வருகிறார்கள். அதேபோல், விருது வாங்கும் கலைஞர்களை நார்வே நாட்டுக்கு அழைத்துச் செல்வது, அங்கு அவர்களை தங்க வைப்பது போன்றவை பொருளாதார ரீதியாக மிகப்பெரியது, அதற்காக பெரும் தொகை செலவு ஆகும். அதனால் தான் நான் வசீகரனிடம் ஒன்று சொன்னேன், நீங்க இங்கே வர வேண்டும். விருது வாங்கும் கலைஞர்களை நார்வேக்கு அழைத்து செல்வதை விட, நீங்க விருதுகளை எடுத்துக்கொண்டு தமிழ்நாட்டுக்கு வந்து இங்கே வைத்து விருது வழங்குங்கள் என்றேன். அதை அவர் செய்வார் என்று நம்புகிறேன். காரணம், இந்த நார்வே தமிழ்த் திரைப்பட விழா மக்களிடம் சென்று சேர வேண்டும். இது தமிழர்களுக்கு தமிழனால் வழங்கப்படும் விருது, இதை நாம் கர்வத்தோடு மேலே எடுத்துச் செல்ல வேண்டும். எடுத்துச் செல்வார்கள் என்று நம்புகிறேன்.” என்றார்.
நடிகர் ரோபோ சங்கர் பேசுகையில்,
———————————————–
“கலைஞர்கள் மீது அன்பும், பேராதர்வம் காட்டக்கூடியவர்கள் இலங்கை தமிழர்கள் தான், அவர்களை விட யாரும் இருக்க முடியாது. நார்வே தமிழ்த்திரைப்பட விழா தமிழர்களுக்கு பெருமை சேர்க்கும் விழா. அதில், புரட்சிக்கலைஞர் விஜயகாந்த் பெயரில் விருது வழங்குவது, அந்த விருது தம்பி கே.பி.ஒய் பாலாவுக்கு கிடைத்திருப்பது மகிழ்ச்சி. அந்த விருதுக்கு தகுதியானவர் தம்பி பாலா. புரட்சிக்கலைஞர் விஜயகாந்த் பெயரில் வழங்கப்படும் முதல் விருது அவருக்கு கிடைத்திருப்பதில் எனக்கும் மகிழ்ச்சி. இதுபோல் பலர் கலைஞர்களை நீங்கள் கெளரவிக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். நார்வே தமிழ்த் திரைப்பட விழாவை தமிழ்நாட்டில் நடத்த வேண்டும், தமிழகர்களுக்கு பெருமை சேர்க்க வேண்டும், நன்றி.” என்றார்.
தயாரிப்பாளர்கள் சங்க செயற்குழு உறுப்பினரும் பி.ஆர்.ஓ யூனியன் தலைவருமான என்.விஜயமுரளி பேசுகையில்,
———————————————–
“’வீரத்தின் மகன்’ படம் பார்த்தோம், மிக சிறப்பாக இருந்தது. மனதை நெருட வைக்கும் ஒரு படம். இதுபோன்ற வரலாற்றை நாம் பத்திரிகையில் பார்த்திருப்போம், சில ஆவணப்படங்கள் மூலம் பார்த்திருப்போம். ஆனால், அந்த போரட்டத்தின் வலியை முழுமையாக ஒரு சிறுவன் மூலம் காண்பித்திருப்பது சிறப்பாக இருக்கிறது. நார்வே தமிழ்த்திரைப்பட விழா மூலம் விருது வழங்குவது வரவேற்கத்தக்கது. சிறந்த படம், சிறந்த நடிகர், இயக்குநர் என்று விருது வழங்கும் நீங்கள், வெற்றி பெற்ற படங்களுக்கு சிறப்பான முறையில் பப்ளிஷிட்டி பண்ண பி.ஆர்.ஓ-க்களுக்கும் விருது வழங்க வேண்டும், என்ற கோரிக்கையை முன் வைத்து விடைபெறுகிறேன், நன்றி.” என்றார்.
நடிகரும் இயக்குநருமான போஸ் வெங்கட் பேசுகையில்,
———————————————–
“வசீகரன் ஒரு நல்ல இளைஞன், ஒரு நாள் போன் வந்தது, உங்களுக்கு சிறந்த வில்லனுக்கான விருது கிடைத்திருக்கிறது என்றார்கள். தமிழ்நாட்டில் இருந்து அந்த போன் வந்திருந்தால் என்னவா எடுத்துட்டிருப்போம் என்று தெரியல, ஆனால் நார்வேல இருந்து பேசுவதாக சொன்னார்கள். உடனே நெட்ல அது குறித்து தேடிய போது, மிகப்பெரிய விருது என்பது தெரிய வந்தது. உடம்பெல்லாம் ஒரு மாதி ஆகிவிட்டது. கண்கலங்கிவிட்டது. அந்த அளவுக்கு அது பெரிய விருது. அதற்கு காரணம் நார்வே என்பது தான். அதனால், விருது பெறுபவர்களை அங்கே அழைத்துச் சென்று விருது வழங்கினால் அந்த விழா சிறப்பாக இருக்கும், அதற்கு தான் நீங்கள் பாடுபட வேண்டும், என்று நினைக்கிறேன். என்னால் அப்போது அந்த விருது வாங்க முடியவில்லை. என்னுடைய செலவில் நார்வே நாட்டுக்கு வர வேண்டும் என்று சொன்னார்கள். அப்போது என்னிடம் அவ்வளவு பணம் இல்லை, முதல் படம் குறைந்த சம்பளம், அதை வைத்துக்கொண்டு எப்படி செல்ல முடியும், அதனால் நான் போகவில்லை.
இன்று நடக்கும் விருது விழாக்கள் எல்லாமே வியாபார நோக்கத்தோடு தான் நடத்தப்படுகிறது. அவர்கள் ரஜினி, அஜித் போன்றவர்களுக்கு மட்டுமே விருது வழங்குவார்கள், அதனால் அவர்களுக்கு பலர் பணம் கொடுப்பார்கள். ஆனால், ‘போர் தொழில்’, ‘அயோத்தி’ போன்ற படங்களுக்கு விருது கொடுப்பவர்கள் இவர்கள் மட்டும் தான். அதனால், தான் இவர்களுக்கு பெரிதாக பணம் வருவதில்லை. நல்லது பெரிய அளவில் வளர்வது என்பது ரொம்ப கஷ்ட்டம். ஆனால் வளர்ந்துவிட்டால் யாராலும் அழிக்க முடியாது. நிச்சயம், நார்வே தமிழ்த்திரைப்பட விழாவும், வசீகரனும் நிச்சயம் பெரிய அளவுக்கு வருவார்கள் என்று நான் நம்புகிறேன். நீங்க ஆஸ்கார் விருதுக்கு நிகராக வரவேண்டும் என்று சொல்கிறீர்கள், ஆனால் நாங்கள் அதற்கு மேலாக நார்வே தமிழ்த் திரைப்பட விழா விருதை பார்க்கிறோம். எதிர்காலத்தில் உலகம் கொண்டாடுகிற ஒரு விருதாக மட்டும் இன்றி, பல சூப்பர் ஸ்டார்கள் உங்களின் விருதை எதிர்பார்க்கும் காலமும் வரும். பிரசாத் லேபுக்கு என்று ஒரு வரலாறு உண்டு. இங்கு மிகப்பெரிய சினிமா ஆத்மா இருக்கிறது. நான் நல்லது தானே செய்கிறேன், எனக்கு கிடைக்க வேண்டியது ஏன் கிடைக்கவில்லை, என்று நீங்கள் இந்த இடத்தில் வடித்த கண்ணீர் வீண்போகாது, நிச்சயம் நீங்கள் பெரிய அளவில் வருவீர்கள்.” என்றார்.
இயக்குநரும் தயாரிப்பாளருமான
——————————————–
வி.சி.குகுநாதன் பேசுகையில், “’போர் தொழில்’, ‘அயோத்தி’ இரண்டு படங்களையும் நான் பார்த்தேன், இரண்டும் நல்ல படங்கள். ஆனால், அந்த படங்களின் இயக்குநர்களை நான் இதுவரை பார்த்ததில்லை, இப்போது தான் பார்க்கிறேன். நான் 300 படங்கள் எடுத்திருக்கிறேன், இன்னும் படம் எடுக்கிறேன், அப்படி இருந்தும் இந்த இளைஞர்களை நான் பார்க்காதது ஆச்சரியமாக இருக்கிறது. அதனால், இதுபோன்ற நிகழ்ச்சிகள் மிக அவசியமானது. இப்போது நாம் பார்த்த ’வீரத்தின் மகன்’ படத்தை பார்த்து அனைவரும் கண்கலங்கி இருப்பார்கள். ஆனால் நான் கலங்கியதற்கு காரணம் இருக்கிறது. பலருக்கு அது தெரியாது என்று நினைக்கிறேன். காயத்தை கீறியது போல் இருந்தது என் இதயத்துக்கு. படத்தின் வசனங்கள் அனைத்தும் மிக ஆழமாக இருந்ததோடு, நாளைய உலகத்துக்கு தேவையானதாக இருந்தது. போர் இல்லாத உலகம் உருவாக வேண்டும் என்று படத்தில் அந்த சிறுவன் சொல்கிறான். இந்த போர் வந்தது எதனால் என்பதற்கான காரணத்தை நான் சொல்கிறேன். அரசியல் கட்சி தொடங்கி காந்திய வழியில் அமைதி போராட்டம் நடத்தி வந்த தந்தை செல்வா, தனது 25 வருட அமைதி போராட்டத்திற்குப் பிறகு சொன்னது, இலங்கையில் தமிழர்கள் மானத்தோடு வாழ வேண்டும் என்றால் அதற்கு தமிழ் ஈழம் வேண்டும், என்றார். அதன் பிறகு இதை தவிர வேறு வழி இல்லை, என்ற நிலையில் தான் போர் தொடங்கியது. தமிழர்களின் மானத்தை காப்பாற்ற, உயிரை காப்பாற்ற, உரிமையை காப்பாற்ற போர் தொடங்கப்பட்டது. இந்த படத்தில் இடம்பெற்ற சிறுவனின் கதாபாத்திரத்தை செதுக்கியவர்களை பாதம் தொட்டு வணங்குகிறேன். உணர்ச்சியை தொடும்படி, காட்சிகள் அமைந்திருந்தது, வசனங்கள் சிறப்பாக இருந்தது. இது யாருடைய பிள்ளை? என்று நாம் நினைக்கும்படி படம் இருந்தது.
நார்வே தமிழ்த் திரைப்பட விழா மற்றும் விருது வழங்கும் விழா பற்றி சொல்ல வேண்டும் என்றால், தனிமனிதனால் இதுபோன்ற விழாக்களை நடத்துவது மிக கஷ்ட்டமானது. பல நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கும் அனுபவத்தில் நான் சொல்கிறேன். இந்த விழாவை வசீகரன் தனி ஆளாக எதற்கு நடத்துகிறார் என்று தெரியவில்லை. நான் திரையரங்கமே இல்லாத ஒரு தீவில் பிறந்தவன். இன்று இந்தியாவின் 9 மொழிகளில் 300 படங்கள் எடுத்திருக்கிறேன், அதற்கு காரணம் சினிமா கலை மீது எனக்கு இருந்த வெறி, வேட்கை. அதனால் தான் இவ்வளவு பெரிய வெற்றியை பெற்றிருக்கிறேன். அதுபோல், வசீகரனும் நிச்சயம் இதில் வெற்றி பெறுவார். இங்கு வந்திருப்பவர்கள் அனைவரும் அவருக்கு வாழ்த்து சொல்லுங்கள், அவர் வெல்ல வேண்டும் என்று வாழ்த்துங்கள் என்று கூறி விடைபெறுகிறேன், நன்றி.” என்றார்.
இயக்குநர் கலைப்புலி சேகரன் பேசுகையில்,
———————————————–
“சர்வதேச நார்வே தமிழ்த் திரைப்பட விழா எவ்வளவு பெரிய விழா, அதனை வசீகரன் எவ்வளவு சிரமப்பட்டு நடத்திக் கொண்டு வருகிறார் என்பது இங்கே வந்த பிறகு தான் எனக்கு தெரிந்தது. பல தொலைக்காட்சிகளும், நிறுவனங்களும் விருதுகள் வழங்கி வருகிறது. ஆனால், அவர்கள் பெரிய பெரிய படங்கள், நடிகர்களுக்கு தான் விருது கொடுப்பார்கள். ஆனால், நார்வே தமிழ்த் திரைப்பட விழா சரியான படங்களை தேர்வு செய்து விருது வழங்கி வருகிறது. அயோத்தி படம் மிக சிறந்த படம், ஆனால் அதற்கு சரியான திரையரங்கங்கள் கிடைக்கவில்லை. அதனால், அந்த படத்திற்கு கிடைக்க வேண்டிய வசூல் கிடைக்காமல் போய்விட்டது. அதேபோல் எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி வெளியான ‘போர் தொழில்’ முன்னணி நடிகரின் படத்தை விட அதிகம் வசூலித்தது. இந்த இரண்டு படங்களுக்கு விருது அறிவித்திருப்பது சாலச்சிறந்தது. அதேபோல், இயக்குநர் ஆபாவாணுக்கு விருது அறிவிக்கப்பட்டதும் மிக சிறப்பான விசயம். காரணம், திரைப்பட கல்லூரி மாணவர்கள் பலரை உச்சத்தில் கொண்டு சென்றவர் ஆபாவணான். ஆனால், அவர் பட்ட கஷ்ட்டங்கள் ஏராளம் அதை நான் பக்கத்தில் இருந்து பார்த்திருக்கிறேன். எத்தனையோ நடிகர்கள், இயக்குநர்கள் இன்று நன்றாக வாழ்ந்துக்கொண்டிருக்கிறார்கள், அதற்கு ஆபாவனன் காரணமாக இருந்திருக்கிறார். ஆனால், அவர் நன்றாக இல்லை. அவரை தேடி பிடித்து விருது அறிவித்த மகிழ்ச்சி. அவரும் ஒரு போராளி போல் தான், போராளிகளின் நிலை அப்படி தான் இருக்கும். என் தலைவர் பிரபாகரன் என்றுமே எங்கள் இதயத்தில் இருப்பார். 1984 ஆம் ஆண்டு, நானும் தாணுவும் சேர்ந்து யார் என்ற படத்தை ஆரம்பித்தோம். அப்போது அந்த நிருவனத்துக்கு கலைப்புலி என்று பெயர் வைத்ததே, பிரபாகரன் பேரில் உள்ள அன்பினால் தான். இன்றும் கலைப்புலி என்ற பெயரை நான் தாங்கிக்கொண்டிருப்பது போல், தலைவர் பிரபாகரனை நெஞ்சில் தாங்கிக் கொண்டிருக்கிறோம். நான் இரக்கும் வரை அவர் என் நெஞ்சில் இருப்பார், அவர் தான் என் தலைவர். என் தாய் தமிழுக்கு இடையூறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவரை நான் மதிப்பதில்லை.
தமிழர்களுக்கு தமிழரால் கொடுக்கப்படும் விருது என்பதில் பெருமை, அதை விட விஜயகாந்த் பெயரில் விருது அறிவித்தது மிகப்பெரிய விசயம். காரணம், தமிழகத்தில் பிரபாகரன் பெயரை உச்சரிக்க பயந்துக்கொண்டிருந்த காலத்தில் தன் மகனுக்கு பிரபாகரன் என்று பெயர் வைத்தவர் விஜயகாந்த். அப்போது அவரையும் தெலுங்கர் என்று சொன்னார்கள். தமிழர், தெலுங்கர், மலையாளி என அனைவரும் ஒன்று தான் ஒரே இனம் தான். அவர்கள் மொழிகளை பிரித்து பார்த்தால் அதில் தமிழ் தான் இருக்கும். வசீகரன் மிக சிறபபாக இந்த விழாவை நடத்தி வருகிறார். அவர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டிருக்கும் திரைப்படங்களும் மிக சிறந்த படங்களாக இருக்கின்றன. அவர் மேலும் மேலும் வளர வேண்டும் என்று வாழ்த்துகிறேன், நன்றி.” என்றார்.
– வெங்கட் பி.ஆர்.ஓ