“பைக் டாக்சி” திரைப்படம் பூஜையுடன் இனிதே துவங்கியது !!

“பைக் டாக்சி” திரைப்படம் பூஜையுடன் இனிதே துவங்கியது !!

நியூ நார்மல் ஃபிலிம் ஃபேக்டரி சார்பில், தயாரிப்பாளர் K M இளஞ்செழியன் தயாரிப்பில், இயக்குநர் கணபதி பாலமுருகன் இயக்கத்தில் நக்ஷா சரண் நடிக்கும் ‘பைக் டாக்சி’ படத்தின் முதல் தோற்றம் வெளியீடு மற்றும் திரைப்படத்தின் பூஜை,  திரையுலக பிரபலங்களின் முன்னிலையில் படக்குழுவினர் கலந்து கொள்ளக் கோலாகலமாக நடைபெற்றது.

இந்த விழாவினில் இயக்குநர் சுசீந்திரன், இசையமைப்பாளர் ஏ ஆர் ரெஹனா, காளி வெங்கட், வையாபுரி முதலான பிரபலங்கள் கலந்து கொண்டு, படக்குழுவினரை வாழ்த்தினர்.

இவ்விழாவினில்…

பைக் டாக்சி படத்தின் தயாரிப்பாளர் K M இளஞ்செழியன் பேசியதாவது..
இனிய உறவுகள் அனைவருக்கும் வணக்கம். இயக்குநர் கணபதி பாலமுருகன் இதுவரை இயக்கிய இரண்டு படங்களுமே அனைவருக்குமான படம். அதில் ஒரு காட்சி கூட முகம் சுளிக்க வைக்காது. முக்கியமாக லைசென்ஸ் படம் சமூக அக்கறையுடன் எடுக்கப்பட்ட படம். அதே போல் இந்தப்படமும் சமூக அக்கறை மிக்க படைப்பாக இருக்கும். எங்கள் நிறுவனம் சார்பில், வெற்றிப்படங்களை விட நல்ல படைப்புகளை  மட்டுமே தர வேண்டுமென நினைக்கிறோம். இதில் ஏன் பெரிய ஹீரோ இல்லை எனக் கேட்கிறார்கள். இப்படம் மூலம் நக் ஷா சரண் எனும் மிகப்பெரிய நட்சத்திரத்தை அறிமுகப்படுத்துகிறோம். ஆண் பெண் வேறுபாட்டைக் கலைந்து, எங்கள் நிறுவனம் மூலம் அவரை நட்சத்திரமாக அறிமுகப்படுத்துகிறோம்.  பைக் டாக்சி ஓட்டும் ஒரு பெண் அவள் சந்திக்கும் மனிதர்கள் என ஒரு நாளில் நடக்கும் கதை.
இப்படம் மிகச்சிறப்பான சமூக அக்கறை கொண்ட படமாக உங்கள் அனைவரையும் மகிழ்விக்கும் நன்றி.

இயக்குநர் கணபதி பாலமுருகன் பேசியதாவது…
என் படத்தின் தயாரிப்பாளர்கள், என்  குருநாதர் சுசீந்திரன், என் குடும்பம் அனைவருக்கும் என் நன்றிகள். இந்த காலகட்டத்தில் மூன்று படங்கள் செய்வது என்பது மிகக் கடினமானது. அதையும் தாண்டி பல கஷ்டங்களுக்கு இடையில் தான் இப்படம் செய்கிறோம். வித்யா எனும் பைக் டாக்சி ஓட்டும் பெண், ஒரு நாளில் சந்திக்கும் 6 மனிதர்களின் கதை தான் இப்படம், ஒரு நாள் 6 மனிதர்கள், 6 கதைகள் என மிகச் சுவாரஸ்யமாக இருக்கும். ஒரு பெரிய வெற்றிப்படத்தினை உருவாக்கும் முனைப்போடு தான் அனைவரும் வந்துள்ளோம். இப்படத்திற்காக ஆதரவளிக்கும் அனைவருக்கும் எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம் நன்றி.

பைக் டாக்சி படத்தின் நாயகி நடிகை நக்ஷா சரண் பேசியதாவது…
இங்கு வாழ்த்த வந்த அனைவருக்கும் நன்றி. இயக்குநர் சார் சிறப்பான பெண்கள் கதாபாத்திரத்தை எழுதுவார் என்பது அனைவருக்கும் தெரியும். அவர் எழுதியிருக்கும் கேரக்டரை, என்னால் முடிந்த வரை சிறப்பாகச் செய்வேன் என நம்புகிறேன். அனைவருக்கும் நன்றி.

பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா பேசியதாவது..
இப்படத்தின் கதை கேட்க வேண்டும் என்ற அவசியமே இல்லை, பாலா அண்ணா என்ன மாதிரி படம் செய்வார் எனத் தெரியும். கண்டிப்பாக சமூக அக்கறை கொண்ட படமாகத்தான் இப்படம் இருக்கும். பெண்கள் நுழைய முடியாத துறை என்று நிறைய இருக்கிறது, ஆனால் அது இக்காலத்தில் உடைந்து வருகிறது. அது போல் மிக அழகான கருத்தைப் பேசும் படம் இது. பயணத்தைப் பற்றிய  பேசும் படம். இரானியப்படங்களில் இருக்கும் அழகியல் இப்படத்தில் இருக்கும் என நம்புகிறேன். அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

பாடலாசிரியர் இரமணிகாந்தன் பேசியதாவது..
பெண்ணியம் பேசும் படங்களை இயக்குநர் கணபதி பாலமுருகன்  தொடர்ந்து இயக்கி வருகிறார். ரெஹானா மேடத்துடன் இப்படத்தில் இணைகிறோம் என்பது மகிழ்ச்சி. எனக்கு வாய்ப்பு தந்த இயக்குநர் மற்றும் தயாரிப்பாளருக்கு நன்றி. இப்படம் கண்டிப்பாகப் பெரிய வெற்றிப்படமாக இருக்கும் நன்றி

எடிட்டர் வெரோனிகா பிரசாத் பேசியதாவது..
இயக்குநர் கணபதி பாலமுருகன் எனக்கு இரண்டாவது வாய்ப்பு தந்துள்ளார். இயக்குநர், தயாரிப்பாளர் இருவருக்கும் என் நன்றிகள். இப்படம் கண்டிப்பாகச் சிறந்த படைப்பாக இருக்கும்.

நடிகர் ஷோபன் பாபு பேசியதாவது..
இயக்குநர் 25 வருட நண்பர், இந்த வாய்ப்புக்காக அவருக்கு நன்றி. 18 வருட சினிமாப் போராட்டம் இது. எல்லோருக்கும் என் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். இப்படம் கண்டிப்பாகப் பெரிய வெற்றிப்படமாக இருக்கும்.

நடிகர் காளி வெங்கட் பேசியதாவது..
இன்னும் அட்வான்ஸ் கூட வாங்கவில்லை ஆனால் நான் பூஜைக்கு வந்துவிட்டேன். ஆனால் முன்னமே இயக்குநர் எனக்குக் கதை சொன்னார், மிகச் சுவாரஸ்யமான கதை. எனது ரோல் அருமையாக இருந்தது. வையாபுரி அண்ணாவுடன் நடிப்பது மகிழ்ச்சி. இந்த குழுவிற்கு எனது வாழ்த்துக்கள். படம் சிறப்பான படமாக வரும் நன்றி.

மஞ்ச சட்டை பச்சை சட்டை தயாரிப்பாளர் சின்ன சாமி பேசியதாவது..
இயக்குநர் பாலமுருகன் சினிமாவை நேசித்து உருவாக்குபவர். அவர் படங்களில் கண்டிப்பாக சமூக சிந்தனை இருக்கும். இம்மாதிரி இயக்குநருக்கு, குழுவிற்குப் பத்திரிக்கை ஊடகத்தினர் ஆதரவு தர வேண்டும். ஒளிப்பதிவாளர் எனக்குத் தெரிந்தவர் மிகக் கடினமான உழைப்பாளி. இப்படத்தில் நானும் வேலை செய்வதாக இருந்தது. அடுத்த படத்தில் நடக்கும் என நம்புகிறேன். அனைவருக்கும் வாழ்த்துக்கள். படம் பெரிய வெற்றிப்படமாக அமையும்.

இசையமைப்பாளர் ஏ ஆர் ரெஹனா பேசியதாவது..
இயக்குநர் பெண்மையைப் போற்றும் கதாபாத்திரங்கள் எழுதுபவர் மட்டுமல்ல, நிஜத்திலும் பெண்களை மதிப்பவர். அவர் சொன்ன கதை, மிகவும் பிடித்திருந்தது. நாயகி நக்சாவிற்கு மிகச் சிறப்பான ரோல், இப்படம் மூல அவர் நதியா மாதிரி வருவார். படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் நன்றி.

நடிகர் வையாபுரி பேசியதாவது…
எங்களை வாழவைக்கும் ரசிகர்களுக்கு நன்றி. நான் இப்படத்தில் அப்பா கதாபாத்திரம் செய்கிறேன். அப்பா என்றாலே சிறு நடுக்கம் வரும், அப்பா என்றாலே தானாகப் பொறுப்பு வரும், ஆனால் அப்பாவை விட இப்படத்தில் நாயகி நக்ஷாவிற்கு அதிக பொறுப்பு உள்ளது. இயக்குநர் கதை சொன்ன போதே அழுதே விட்டேன். அத்தனை உருக்கமாக இருந்தது. லைசென்ஸ் படத்தில் ஒரு நாள் மட்டுமே நடித்தேன். இயக்குநர் பேசக்கூட மாட்டார் இவர் ஒழுங்காகக் கதை சொல்வாரா ? என்று நினைத்தேன், மிரட்டிவிட்டார். நாயகிக்கு  மிக அழுத்தமான பாத்திரம், புதுமுக நாயகி ஓகேவா எனக்கேட்டேன், உங்களுக்கு மகளாக இவர் தான் சரியாக வருவார். அவரை வைத்து இரண்டு காட்சிகள் எடுத்தேன் எனக் காட்டினார், அதைப் பார்த்தேன்  அற்புதமாக நடித்துள்ளார் வாழ்த்துக்கள். ரெஹனா மேடம் இசையில் நடிப்பது மகிழ்ச்சி. லைசென்ஸ் படம் வெற்றிப்படமாக இல்லையென்றாலும், அடுத்த பட வாய்ப்பை தந்த தயாரிப்பாளர் இளஞ்செழியனுக்கு என் வாழ்த்துக்கள். கண்டிப்பாக இப்படம் வெற்றிப்படமாக அமையும்.

மக்கள் நாயகன் ராமராஜன் நடித்த சாமானியன் மற்றும் இயக்குநர் திரு சுசீந்திரன் தயாரித்த மார்கழி திங்கள் போன்ற திரைப்படங்களில் நடித்த நக்ஷா சரண் முதன்மை கதாபாத்திரத்தில் கதையின் நாயகியாக நடிக்க, வையாபுரி, காளி வெங்கட் முதலான முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க உள்ளனர். இவர்களுடன் ஷோபன் பாபு, குழந்தை நட்சத்திரம் அதிதி பாலமுருகன் நடிக்கவுள்ளனர்.

ஒரு பெண் பைக் டாக்ஸி ஓட்டுனர் ஒரே நாளில் சந்திக்கும் ஆறு சுவாரஸ்யமான நபர்களைப் பற்றிய கதை இது. இத்திரைப்படத்தில் மிக முக்கிய கதாபாத்திரத்தில் சிறிய நாய்க்குட்டி ஒன்று இடம்பெறுகிறது. மிகுந்த பொருட்செலவில் சென்னை மற்றும் பாண்டிச்சேரியில் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது.

கவுண்டமணி நடித்த எனக்கு வேறு வேறு எங்கும் கிளைகள் கிடையாது மற்றும் பின்னணிப் பாடகி ராஜலட்சுமி கதையின் நாயகியாக நடித்த லைசென்ஸ் போன்ற திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் கணபதி பாலமுருகன் இத்திரைப்படத்தின் கதை திரைக்கதை எழுதி  இயக்குகிறார். இப்படத்திற்கு A.R.ரெஹானா இசையமைக்கிறார் M.R.M.ஜெய்சுரேஷ் ஒளிப்பதிவு செய்ய, கலை இயக்குநராக ஆனந்த் மணி பணிபுரிகிறார்கள்.  எடிட்டராக வெரோனிகா பிரசாத் பணியாற்றுகிறார். திரைப்படத்தின் பாடல்களை கார்த்திக் நேத்தா மற்றும் இரமணிகாந்தன் எழுதுகிறார்கள். நடன இயக்குநராக ஹரி கிரண் பணியாற்றுகிறார்.  தயாரிப்பு நிர்வாகியாக ராஜன் பணியாற்றுகிறார்கள்.