அயலான் திரைப்பட விமர்சனம்

அயலான் திரைப்பட விமர்சனம்
சயின்ஸ் பிக்ஷன் ஜானரில் ‘நேற்று இன்று நாளை’ திரைப்படம் மூலம் அறிமுகமாகி,தமிழ் சினிமாவை திரும்பி பார்க்க வைத்த இயக்குனர் ரவிக்குமார் இந்தப்படத்தை இயக்கி இருக்கிறார் .ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து இருக்கும் இந்தப்படத்தில் ரகுல் ப்ரீத் சிங், இஷா கோபிகர், யோகி பாபு, கருணாஸ், பானுப்ரியா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.  வில்லனாக  சரத் கேல்கர் நடித்து இருக்கிறார். கொட்டப்பாடி ராஜேஷ் தயாரித்திருக்கிறார்.


கதை
2030 – ல் பூமியில் எரிபொருள்-ன் தேவை பல மடங்கு அதிகமாகும் என்பதை தெரிந்து கொண்டு, பூமியின் மிக மிக ஆழத்தில் இருக்கும் ஒரு வாயுவை எடுக்க முதலீட்டாளர்களிடம் பிசினஸ் பேசுகிறார் ஆர்யன். அதற்கு காரணம் அவர் கையில்  ஒரு கருவி இருக்கிறது.இதனை வேற்று கிரகத்தில் இருந்து பார்த்து கொண்டு இருக்கும் ஏலியன், அதன் ஆபத்தை உணர்ந்து அந்த கருவியை கைப்பற்ற பூமிக்கு வருகிறது. ஆர்யனுக்கும் -ஏலியனுக்கும் நடக்கும் இந்த போராட்டத்தில் எதிர்பாராத விதமாக இயற்கையின் மீது காதல் கொண்ட அர்ஜூன் ஏலியனுடன் கை கோர்த்து  வில்லனை எதிர்க்கிறான்.ஒரு கட்டத்தில், பல வித போராட்டத்துக்கு பிறகு ஏலியனின் சக்தி அர்ஜூனுக்கு வருகிறது.. அதன் பின்னர் என்ன நடக்கிறது என்பது மீதிக் கதை!
தமிழில் இப்படி ஒரு சயின்ஸ் பிக்சன் கதையை படமாக்கியதற்கு,முதலில் இயக்குனருக்கும், பட குழுவுக்கும்
நன்றியை தெரிவித்துக் கொள்ளலாம். தமிழில்  சயின்ஸ் பிக்சனை அடிப்படையாகக் கொண்ட படங்கள் நிறைய வர வேண்டும். அதற்கு முதல் படி இப்படம்.அர்ஜுனாக நடித்திருக்கும் சிவகார்த்திகேயன் வழக்கம் போல காமெடி, ஆக்ஷன், எமோஷன் என கலந்து கட்டி நடித்திருக்கிறார். ரகுல் ப்ரீத் சிங்,கதா பாத்திரத்திற்கு முடிந்த அளவு முக்கியத்துவம் கொடுத்து நடிக்க முயற்சி செய்து இருக்கிறார். ஆனால் முயற்சியில் பலன் இல்லை.யோகி பாபுவின் கவுண்டர்கள் சுமார் ரகம். வில்லனாக வரும் சரத் நடிப்பு போதாது. படத்தில் இவ்வளவு நட்சத்திரங்கள் இருந்து ஏமாற்றிய  போதும், படத்தை ஒட்டு மொத்தமாக ரசிக்க வைத்திருப்பதுபடத்தின் இயக்குனர் ரவிக்குமார் தான்.
படத்தின் கிராஃபிக்ஸ் காட்சிகள் சிறப்பு.  ஒரு இடத்தில் கூட பிசிறு தட்டாமல் காட்சிப்படுத்தி இருக்கிறது கிராஃபிக்ஸ் குழு. ஏலியனுக்கு பின்னணி குரலாக வந்திருக்கும் நடிகர் சித்தார்த்தின் குரல் கனகச்சிதமாக பொருந்தி இருக்கிறது. பூமி மனிதர்களுக்கு மட்டும் சொந்தம் அல்ல என்று உணர்த்தும் வகையில்  வசனங்கள் ஒவ்வொன்றும்  சிறப்பு.
பொதுவாக ஹாலிவுட் படங்களில் ஏலியனை வில்லனாக சித்தரித்து இருப்பார்கள். அந்த வகையில் இருந்து மாறுபட்டு , பூமிக்கு வந்து இறங்கும் இந்த ஏலியனை வருக வருக என பாராட்டலாம்.

விமர்சனம் :ராஜூ.