*’சிங்கப்பூர் சலூன்’ டிரெய்லர் வெளியீட்டு விழா!*
வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல், ஐசரி கணேஷ் தயாரிப்பில், கோகுல் இயக்கத்தில் நடிகர் ஆர்.ஜே. பாலாஜி, சத்யராஜ், மீனாட்சி செளத்ரி உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் இந்தப் படம் ஜனவரி 25 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. இதன் டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது.
இதில் எடிட்டர் ஆர்.கே. செல்வா, “’சிங்கப்பூர் சலூன்’ படத்தில் நான் இருக்க முக்கிய காரணம் எனது நண்பர், சகோதரர் ஆர்.ஜே. பாலாஜிதான். அவர்தான் என்னை இயக்குநர் கோகுலுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். படத்தின் கதை ஃபன்னாகவும் அதே சமயம் எமோஷனலாகவும் இருந்தது. கோகுல் சாரின் ‘இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா?’ படம் தியேட்டரில் ரொம்ப என்ஜாய் பண்ணிப் பார்த்தேன். அதில் விஜய் சேதுபதி சார் வேற மாதிரி நடித்திருந்தார். அப்படியான ஒரு இயக்குநரிடம் நான் பணிபுரிய போகிறேன் என்பதே மகிழ்ச்சியாக இருந்தது. இந்தப் படத்தில் ஆர்.ஜே. பாலாஜியை நல்ல நடிகராகப் பார்க்கலாம். இந்த வாய்ப்புக் கொடுத்த ஐசரி கணேஷ் சாருக்கு நன்றி. சத்யராஜ் சார் படத்தில் செம ஃபன் செய்திருக்கிறார்”
பின்னணி இசை கொடுத்த ஜாவித் ரியாஸ், “இந்தப் படத்திற்குள் நான் தாமதமாகதான் வந்தேன். வாய்ப்புக் கொடுத்த இயக்குநர் கோகுலுக்கு நன்றி. கடந்த வருடத்தில் எனக்கு நடந்த ஒரே நல்ல விஷயம் இந்தப் படம்தான். நிச்சயம் படத்தை என்ஜாய் செய்வீர்கள். நன்றி”.
இசையமைப்பாளர்கள் விவேக்-மெர்வின், “ஆர்.ஜே. பாலாஜி சாருக்கும், தயாரிப்பாளர் ஐசரி கணேஷூக்கும் நன்றி. ’வடகறி’தான் எங்களுக்கு முதல் படம். அதில்தான் ஆர்.ஜே. பாலாஜி சாருடன் எங்களுடைய பயணம் ஆரம்பித்தது. இயக்குநர் கோகுல் சாருடைய காமெடிக்கு நாங்கள் மிகப்பெரிய ரசிகர்கள். படத்தில் இருந்து வெளியான முதல் பாடலுக்கு நீங்கள் கொடுத்த ஆதரவுக்கு நன்றி. படம் பெரிய வெற்றி பெற வாழ்த்துகள். படம் இந்த மாதம் 25 அன்று வெளியாகிறது”.
நடிகர் கிஷன் தாஸ், “இரண்டு வருடங்களுக்கு முன்னால் பாலாஜி அண்ணன், என்னிடம் வந்து இந்தப் படத்தின் கதையைச் சொல்லி பஷீர் கதாபாத்திரம் நீ நடித்தால் நன்றாக இருக்கும் எனச் சொன்னார். கோகுல் சாரும் சிரிக்க சிரிக்க கதை சொன்னார். இந்தப் படத்தில் பல சிறந்த நடிகர்களோடு நடித்திருக்கிறேன். ஆனாலும், எனக்குப் பிடித்த நடிகர் என்றால் அது சத்யராஜ் சார்தான். சின்ன வயதில் இருந்து அவரைப் பார்த்தாலே எனக்குப் பயம். ஆனால், படப்பிடிப்புத் தளத்தில் அவருடைய சின்சியாரிட்டி எனக்கு மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன். வாய்ப்புக் கொடுத்த ஐசரி சாருக்கு நன்றி. படத்தில் தொழில்நுட்பக் குழு அனைவரும் சிறப்பாக செய்துள்ளனர். இந்தப் படத்தின் மூலம் பாலாஜி எனக்கு அண்ணனாகக் கிடைத்துள்ளார். ஜனவரி 25 படம் பார்த்துவிட்டு ஆதரவு கொடுங்கள்”.
நடிகர் ரோபோ ஷங்கர், “இந்தப் படத்தில் எனக்கு நல்ல வாய்ப்புக் கொடுத்த தயாரிப்பாளருக்கு நன்றி. ஆர்.ஜே. பாலாஜியை நான் விஜய் என்று கூப்பிடுவேன். அவர் என்னை அஜித் என்று கூப்பிடுவார். மிமிக்ரி ஆர்டிஸ்டாக இருந்த என்னை நல்ல நடிகனாக மாற்றிய இயக்குநர் கோகுலுக்கு நன்றி. எதாவது விஷயம் தெரியவில்லை என்றால் நாம் கூகுளை தேடுவோம். அதுபோல, நடிப்பு வரவில்லை என்றால் நாம் கோகுலைத் தேட வேண்டும். விழாவிற்கு வந்துள்ள விஜய்சேதுபதி சாருக்கு நன்றி. சத்யராஜ் சாரிடம் இந்தப் படத்தில் நிறையக் கற்றுக் கொண்டேன். படம் ஜனவரி 25 அன்று வெளியாக காத்திருக்கிறேன்”.
தயாரிப்பாளர் ராஜன், “ஐசரி கணேஷின் அப்பா ஐசரி வேலன் கண்ட நல்ல கனவுகளை எல்லாம் ஐசரி கணேஷ் நிறைவேற்றி வருகிறார். ‘மாங்குடி மைனர்’ என்ற படத்தில் ரஜினி வில்லன். அதில் கணேஷ் காமெடியன். அதன் பிறகு தயாரிப்பாளர் ஆனார். அப்பாவைப் போலவே பல வெற்றிப் படங்களைக் கொடுத்தார். ஆர்.ஜே. பாலாஜி, சத்யராஜ் என பலரும் இருக்கும் இந்தப் படமும் நிச்சயம் வெற்றிப் பெறும். கோகுல் சிறந்த இயக்குநர். நடிகர் விஜய் சேதுபதிக்கு இந்த இடத்தில்தான் நான் நன்றி சொல்ல வேண்டும். நான் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் விநியோக சங்கத் தலைவராக உள்ளேன். இப்போது அங்குள்ள விநியோகஸ்தகர்கள் சங்கம் மிகவும் கடினமான சூழலில் உள்ளது. ஐசரி கணேஷிடம் இதுபற்றி சொல்லி பொருளாதார உதவி கேட்டபோது, எதைப்பற்றியும் யோசிக்காமல் ஐந்து லட்சம் கொடுத்தார். அதன் பிறகு, ‘நம்முடைய பல படங்களை விநியோகம் செய்தவர்கள் கடினமான சூழலில் உள்ளார்கள். அவர்களுடைய மருத்துவச் செலவுக்கு உதவி வேண்டும்’ எனப் பல நடிகர்களுக்கு கடிதம் எழுதினேன். அதைப் பார்த்துவிட்டு அவரது மேனேஜர் மூலமாக ஒரு லட்ச ரூபாய் பணத்தை ஆன்லைன் மூலம் உடனே கொடுத்தார் விஜய் சேதுபதி. அதற்கு இந்த மேடையில் நன்றி சொல்ல நான் கடமைப்பட்டிருக்கிறேன். பல பல்கலைக்கழகங்களுக்கு கடவுள் பெயர் வைத்திருப்பார்கள். ஆனால், ஐசரி மட்டும்தான் தன் தலைமுறைக்கும் பல்கலைக்கழகத்திற்கும் அப்பா பெயரை வைத்திருக்கிறார். அவரைப் போலவே நீங்களும் தாய் தந்தையரை மறக்காதீர்கள். படத்திற்கும் வாழ்த்துகள்” என்றார்.
அம்மா கிரியேஷன்ஸ் தயாரிப்பாளர் டி.சிவா, “இன்று தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய மிக முக்கியமான தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று வேல்ஸ் இண்டர்நேஷனல்ஸ் கம்பெனி, ஐசரி கணேஷ் சார். பல பிசினஸ் அவருக்கு இருந்தாலும் அதை எல்லாம் தாண்டி அவர் சினிமாவை இவ்வளவு ஆர்வமாக செய்கிறார் என்றால் சினிமா மீது அவருக்குள்ள அந்த காதல்தான் காரணம். சினிமாத்துறையினர் சார்பாக அவருக்கு நன்றி சொல்கிறேன். அவருடைய நல்ல மனதிற்கு படம் நிச்சயம் வெற்றிப் பெறும். படத்தின் டிரெய்லர் அருமையாக இருந்தது. படத்தின் ரிலீஸ் தேதியும் சரியாக அமைந்துள்ளது. சத்யராஜ் சார் தமிழ் சினிமாவுக்குக் கிடைத்த பொக்கிஷம். அவர் சாமி கும்பிடுவதில்லை என்றால் கூட சினிமாவைத் தெய்வமாக மதிக்கிறார். இப்போதும் கூட படங்கள், விழாக்கள், அடுத்தடுத்து பேட்டிகள் என சுறுசுறுப்பாக உள்ளார். இப்போது தமிழ் சினிமாவில் ஹீரோக்களுக்கான அத்தனை இலக்கணங்களையும் விஜய் சேதுபதி உடைத்துவிட்டார். அவரவருடைய படங்களின் புரோமோஷனுக்கே கெஞ்ச வேண்டிய சூழல் இருக்கும் நிலையில், இன்னொருவர் படத்திற்காக விஜய்சேதுபதி இங்கு வந்திருப்பது பாராட்டப்பட வேண்டிய ஒன்று. இந்தப் பண்பு உங்களை நிச்சயம் உயர்த்தும். விஜயகாந்த் சார் நடிகர் என்பதைத் தாண்டி அவர் நல்ல மனிதர் என்ற பெயர் அவருக்கு கடைசி வரை வந்தது. அதுபோலதான் விஜய்சேதுபதிக்கும் கடைசி வரை வர வேண்டும். உருவத்தில் மட்டுமல்ல, குணத்திலும் அவர் விஜயகாந்த் சார்தான். ஆர்.ஜே.வாக இருந்து நடிகராக மாறியுள்ள பாலாஜியின் வெற்றி ஒவ்வொரு சாமானியரின் வெற்றிதான். படம் வெற்றியடைய வாழ்த்துகள்!”
இயக்குநர் விஜய், “கணேஷ் அங்கிள் காலேஜில்தான் நான் படித்தேன். என்னுடைய கனவைப் புரிந்து கொண்டு என்னை முன்னேற்றியுள்ளார். என்னை மட்டுமல்ல, நிறைய பேருக்கு கணேஷ் சார் உதவிகள் செய்து வருகிறார். பாலாஜி செய்யும் விஷயங்கள் எல்லாமே நேர்த்தியாக இருக்கும். கோகுல் சார் படங்களின் மிகப்பெரிய ரசிகன் நான். விஜய்சேதுபதி சாரின் ‘மெரி கிறிஸ்துமஸ்’ படத்திற்கு வாழ்த்துகள். சத்யராஜ் சாரின் ரசிகன் நான். இவர் இந்தப் படத்தில் இருப்பது பெரிய பலம் என்பது படம் வெளியான பின்பு தெரியும். படக்குழுவினருக்கு வாழ்த்துகள்!”.
நடிகர் சத்யராஜ் பேசியதாவது, “சரியான மனிதரிடத்தில் இருந்தால் நமக்கும் சரியான விஷயங்கள் நடக்கும். அப்படி எம்.ஜி.ஆரிடம் இருந்த நல்ல குணங்கள் ஐசரி வேலனுக்கும் அவருடைய மகன் ஐசரி கணேஷூக்கும் வந்திருக்கிறது. வாழ்த்துகள். 45 வருடங்கள் சினிமாவில் இருக்கிறேன் என்றால் சலூனுடைய முக்கியத்துவம் என்ன என்பது எனக்குத் தெரியும். ஹேர்ஸ்டைல் என்பது வாழ்க்கையில் முக்கியமான விஷயம். எம்.ஜி.ஆர். சினிமாவில் இருந்தபோது ஒரு ஹேர்ஸ்டைலிலும் பொது வாழ்க்கைக்கு வந்தபோது வேறொரு லுக்கிலும் இருந்தார். அதுபோலதான் ரஜினிகாந்த், விஜயகாந்தும். இப்படி எல்லோருடைய வாழ்க்கையிலும் முக்கியமான, ஹேர்ஸ்டைலை வைத்து படம் எடுப்பது நல்ல விஷயம். சினிமாவில் ஹீரோவுக்கு வெற்றிகள் வர வர அடுத்தடுத்தப் படங்களில் பட்ஜெட்டை ஏற்றினால் மட்டுமே வேறொரு தளத்திற்குப் போக முடியும். ’எல்.கே.ஜி.’, ‘மூக்குத்தி அம்மன்’, ‘ரன் பேபி ரன்’ இப்போது ‘சிங்கப்பூர் சலூன்’ என பாலாஜியின் படங்களின் பட்ஜெட் அடுத்தடுத்து அதிகமாகிக் கொண்டேப் போகிறது. குறிப்பாக, இந்தப் படத்தின் கிளைமாக்ஸில் அவ்வளவு கிராஃபிக்ஸ் பணிகள் இருக்கிறது. சிறப்பான சிஜி பணிகளுக்கு தயாரிப்பாளர் பணம் தர வேண்டும். ஒவ்வொரு ஹீரோவுக்கும் எவ்வளவு பணம் செலவழிக்க வேண்டும் என தயாரிப்பாளருக்கு ஒரு மைண்ட்செட் இருக்கும். அதைத்தாண்டி அவர் செலவழிக்கிறார் என்றால் அந்தப் படத்தின் மீது அவருக்கு இருக்கும் நம்பிக்கைதான் அதற்குக் காரணம். இதற்கு முன்பு கவுண்டமணி, மணிவண்ணன், வடிவேலு இவர்களுடன் சேர்ந்துதான் காமெடி செய்திருக்கிறேன். ஆனால், நானே ஒத்தைக்கு ஒத்தையாக நின்று காமெடி செய்தது இந்தப் படத்தில்தான். திருவிளையாடல் நாகேஷ் போல, ‘தனியா நடிக்க வச்சுட்டானே’ என்றுதான் நடித்தேன். இயக்குநர் கோகுலின் அந்த தைரியத்திற்கு நன்றி. வில்லன் ரோல் நடித்துவிட்டு கெஸ்ட் ரோல் நடிக்க வேண்டும் என்றால் யோசிப்பேன். ஆனால், அந்த தைரியத்தை விஜய்சேதுபதி எனக்குக் கொடுத்தார். அவருக்கு ‘மக்கள் செல்வன்’ பட்டம் பொருத்தமானது. நான் முதல் படத்தில் நடித்ததைப் போல இந்த சிங்கப்பூர் சலூனை எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன். ஏனெனில், காமெடி நடிகர் என எனக்கு இன்னொரு கதவு திறக்கப்படும்” என்றார்.
நடிகர் ஜான் விஜய், “இந்தப் படத்தில் வாய்ப்புக் கொடுத்த இயக்குநர் கோகுல், தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் சாருக்கு நன்றி. நானும் ரேடியோவில் இருந்திருக்கிறேன். நான் பார்த்தது வரையில் இன்றைய தேதியில் டிரெண்டியான ஆர்.ஜே. பாலாஜிதான். சினிமாவிலும் எண்டர்டெயின்மெண்ட்டோடு நல்ல மெசேஜும் சொல்வார். கோகுலும் திறமையான இயக்குநர். சலூன் கடைக்காரர்களுக்கு புது ஸ்டைல் இந்தப் படம் கொடுக்கும்”.
டான்ஸ் மாஸ்டர் பூபதி, “கோகுல் சாரின் ‘ரெளத்ரம்’ தவிர எல்லாப் படங்களிலும் நான் வேலை செய்திருக்கிறேன். வாய்ப்புக்கு நன்றி சார். சலூன் என்பதையும் தாண்டி இந்தப் படத்தில் நிறைய விஷயம் உள்ளது. டான்ஸ் மாஸ்டருக்கு இப்படி ஒரு படம் கிடைப்பது அதிர்ஷ்டம். ஐசரி கணேஷ் சார், ஆர்.ஜே. பாலாஜி சார் மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி”.
நடிகர் தலைவாசல் விஜய், “இந்த வாய்ப்புக் கொடுத்த கோகுலுக்கு நன்றி. விழாவுக்கு வந்திருக்கும் ராஜன் சார், விஜய்சேதுபதி, ரோபோ ஷங்கர் அனைவருக்கும் நன்றி. எல்லோரும் சொன்னதுபோல, கோகுல் திறமையான இயக்குநர். சத்யராஜ் சார் எங்களுக்கு இன்ஸ்பிரேஷன். ஆர்.ஜே. பாலாஜி செட்டில் இருந்தால் எங்கள் பிரச்சினை மறந்து விடும். எனக்குமே இந்தப் படம் மிகவும் எதிர்பார்ப்பு இருக்கும் ஒன்று. குழந்தைகள் என்ன ஆகவேண்டும் என்று நினைக்கிறார்களோ அதை பெற்றோர்கள் நிறைவேற்றித் தர வேண்டும். ஆனால், காலப்போக்கில் பெற்றோர்கள் என்ன ஆகமுடியவில்லையோ அதை தங்கள் பிள்ளைகளின் மேல் திணிக்கிறார்கள். ஆர்.ஜே. பாலாஜி இப்படி ஆக வேண்டும் என்று ஆசைப்படும்போது நான் என்ன முடிவு எடுக்கிறேன் என்பதுதான் விஷயம். ஆர்.ஜே. பாலாஜியுடன் நிறைய காட்சிகள் நன்றாக வந்துள்ளது. படக்குழுவினருக்கு வாழ்த்துகள்”.
இயக்குநர் கோகுல், “ஒரு படத்தின் கண்டெண்ட் வலுவாக இருக்கும்போது, அதை நம்பி தேர்ந்தெடுக்கும் தயாரிப்பாளர்தான் அங்கு ஹீரோ. அப்படி எனக்குக் கிடைத்த சூப்பர் ஹீரோதான் ஐசரி கணேஷ் சார். அவருக்கு நன்றி. அந்த சூப்பர் ஹீரோவை எனக்கு அறிமுகம் செய்தவர் என்னுடைய ஹீரோ ஆர்.ஜே. பாலாஜி. காட்சி சிறப்பாக வரவேண்டும் என்று அவரை நிறைய டார்ச்சர் செய்திருக்கிறேன். அதை எல்லாம் சகித்துக் கொண்டு சிறப்பான அவுட்புட்டைக் கொடுத்திருக்கிறார். பார்பர்கள் கொண்டாடும் படமாக இது இருக்கும். சத்யராஜ் சார் சீனியர் நடிகர். அவர் தேவையான ஒத்துழைப்பைக் கொடுப்பாரா என்ற எண்ணம் இருந்தது. அந்த எண்ணத்தை எல்லாம் உடைத்து அவர் குழந்தைப் போல ஒத்துழைப்புக் கொடுத்தார். இவருடன் வேலைப் பார்த்தது எனக்கு கிடைத்த ஆசீர்வாதம். நான் ரொம்ப நாளாக யோசித்தப் படம் இது. வாழ்க்கை அடுத்து நமக்கு என்ன அதிசயம் வைத்திருக்கும் என்பது நமக்குத் தெரியாது. அப்படியான படம்தான் ‘சிங்கப்பூர் சலூன்’. நான் இதுவரை எடுத்த படங்களிலேயே இதுதான் சிறந்தது. படக்குழுவினர் அனைவருமே சிறப்பான வேலையைக் கொடுத்துள்ளனர். எனக்கு ஒரு பிரச்சினை என்றால் முதலில் வரும் நபர்களில் விஜய்சேதுபதியும் ஒருவர். அவர் இன்று வந்திருப்பது சந்தோஷம். படத்தை திரையரங்குகளில் பார்த்துவிட்டு சொல்லுங்கள்”
நடிகர் விஜய்சேதுபதி, “படத்தின் டிரெய்லர் பார்த்தேன். அருமையாக இருந்தது. அதை விட சூப்பராக ‘சிங்கப்பூர் சலூன்’ என்ற டைட்டில் இருக்கிறது. பாலாஜியைத் திரையில் பார்க்க நன்றாக இருக்கிறது. சில வருடங்களுக்கு முன்பு நானும் பாலாஜியும் மொட்ட மாடியில் ஒரு மணி நேரம் தம் அடித்துக் கொண்டே பல கதைகள் பேசியுள்ளோம். அவருடைய வளர்ச்சி, அவர் தைரியமாக கருத்துகளைப் பேசும் விதம் எல்லாவற்றையும் ரசிக்கிறேன். கோகுல் கொஞ்சம் டார்ச்சர்தான். ஆனால், திறமையான இயக்குநர். அவருடன் வேலைப் பார்த்த இரண்டு படங்களும் மிகச்சிறந்த அனுபவம். இதைவிட மிகப்பெரிய மேஜிக் படங்களில் செய்வார். சத்யராஜ் சாரின் நடிப்பைத் திரையில் பார்ப்பதே அவ்வளவு சந்தோஷமாக இருக்கும். அவருடைய எந்தப் படத்தையும் பார்ப்பது சிறந்த அனுபவம். அவருடன் சரிக்கு சமமாக நடிக்க வேண்டும் என்ற விருப்பம் உள்ளது. டபுள் ஹீரோ சப்ஜெக்ட்டாக அது இருக்க வேண்டும்”.
தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், ”இந்த விழாவிற்கு சிறப்பு விருந்தினராக வருகை தந்திருக்கும் விஜய்சேதுபதி சார் ஒரு கோரிக்கை வைத்தார். அதாவது, சத்யராஜ் சாருடன் டபுள் ஹீரோ சப்ஜெக்ட் நடிக்க வேண்டும் என்று. கோகுல் சாரிடம் அப்படி ஒரு கதை இருந்தால் நான் படத்தைத் தயாரிக்க ரெடி. ’சிங்கப்பூர் சலூன்’ படத்தின் ரிலீஸ் தேதி என்னவோ ஜனவரி 25தான். ஆனால், அதற்கு முன்பு எங்கள் தயாரிப்பில் கோகுலுடைய அடுத்தப் படம் ரெடியாகி விட்டது. உங்களைப் போலவே, நானும் படத்தைத் திரையரங்குகளில் பார்க்க ஆவலாக உள்ளேன். நான் தனியாக நிறைய முறை பார்த்துவிட்டேன். நான் எடுத்தப் படங்களிலேயே எனக்கு மிகவும் பிடித்தப் படம் இது. ஆர்.ஜே. பாலாஜி இதில் வேற பாலாஜியாக அருமையாக நடித்திருக்கிறார். சத்யராஜ் சார் வேற லெவலில் நடித்திருக்கிறார். சிறப்பாக நகைச்சுவை வந்துள்ளது. படம் பிடித்துப் போய் ரெட் ஜெயண்ட்ஸ் விநியோகம் செய்துள்ளது. சேட்டிலைட் உரிமையை கலைஞர் தொலைக்காட்சி எடுத்திருக்கிறது. அவர்களுக்கு நன்றி. படக்குழுவினர் அனைவரும் சிறப்பாக வேலை செய்துள்ளனர். படம் உங்களுக்கும் பிடிக்கும். விழாவிற்கு வந்திருக்கும் அனைவருக்கும் நன்றி!”.
நடிகர் ஆர்.ஜே. பாலாஜி, “இந்தப் படத்திற்காக வந்து சிறப்பித்த பெரிய மனிதர்கள் அனைவருக்கும் நன்றி. தலைவாசல் விஜய் சார், ரோபோ ஷங்கர் சார் என அனைவருமே சிறப்பாக நடித்துள்ளனர். அடுத்து யங் ஹீரோவாக மாறப்போகும் கிஷன் தாஸ், எங்கள் படத்தில் நடிக்க ஒத்துக் கொண்டதற்கு நன்றி. இப்போது அவர் மூன்று படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். எனக்கு ஜோடியாக நடித்துள்ள மீனாட்சி செளத்ரி புரோமோஷனுக்கு நேரம் தர முடியாத அளவிற்கு பிஸியாக இருக்கிறார். ஆமாம், இப்போது அவர் விஜய் சாருக்கு ஜோடி. இன்னொரு ஹீரோயினும் இருக்கிறார். சில காரணங்களால் அவராலும் வர முடியவில்லை. நட்புக்காக நடித்துக் கொடுத்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மற்றும் ஜீவா சாருக்கு நன்றி. இவர்கள் தவிர இன்னொரு பெரிய நடிகர் முக்கியமான ஒரு கதாபாத்திரம் நடித்துள்ளார். அதை இப்போது நாங்கள் சொல்லவில்லை. ஒரு ரூபாய் கூட தராமல் அவர் எங்களுக்கு நடித்துக் கொடுத்ததற்கு நன்றி. படத்திற்கு சிறப்பாக உழைத்துக் கொடுத்த படக்குழுவினருக்கு நன்றி. இயக்குநர் கோகுல் கூட வேலைப் பார்ப்பது சிரமம் என விஜய்சேதுபதி சொன்னார். நாங்கள் அடித்துக் கொண்டோம் என சில செய்திகள் எல்லாம் பார்த்தேன். அப்படி எல்லாம் இல்லை. கோகுலுடன் வேலைப் பார்ப்பது கஷ்டம்தான். ஏனெனில், அவருடைய கதாபாத்திரத்திற்கு நான் எதிராக இருந்தேன். ஆரம்பத்தில் நிறைய விவாதித்தோம். பிறகு கொஞ்சம் கொஞ்சமாகதான் அவருடைய கதைக்கு செட் ஆனேன். இந்தப் பயணம் கடினமாகதான் இருந்தது. ஆனால், ஆர்வத்துடனும் மறக்க முடியாத ஒன்றாகவும் இருந்தது. அடுத்தப் படத்தில் நான் சிறப்பாக நடிக்க இவருடன் வேலைப் பார்த்ததும் முக்கியக் காரணம். இந்தக் கதை மீது நான் வைத்த நம்பிக்கையை ஐசரி கணேஷ் சாரும் வைத்திருந்தார். படத்தில் சலூன் செட் போடவே ஒன்றரை கோடி ஆனது. இதற்கெல்லாம் ஆதரவு கொடுத்த ஐசரி சாருக்கு நன்றி. ரெட் ஜெயண்ட்ஸ் நல்ல படங்களை மட்டுமேதான் வாங்கும். அப்படித்தான் இந்தக் கதையும் பிடித்துப் போய் வாங்கினார்கள். இந்த வேலை இவர்கள் மட்டும்தான் செய்வார்கள் என்ற ஜாதி மனப்பான்மையை உடைத்து உலகம் எவ்வளவோ தூரம் முன்னேறி விட்டது. எந்த வேலையை யார் பிடித்து செய்தாலும் முன்னேறிக் கொண்டே போகலாம் என்பதுதான் இதன் அடிநாதம். நிறைய பேருக்கு கனெக்ட் ஆகும் என ஆசையாக செய்த படம் இது. பிடிச்ச விஷயம் செய்யும் முன்பு நன்றாகப் படித்து விடுங்கள். அது ரொம்ப முக்கியம். படம் ஜனவரி 25 அன்று வெளியாகிறது. படம் பார்த்துவிட்டு சொல்லுங்கள்”.